×

சங்கரய்யா மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

சென்னை: கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். புதுவை கவர்னர் தமிழிசை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முதுபெரும் சுதந்திர போராட்ட வீரருமான சங்கரய்யா உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது மறைவு கம்யூனிஸ்ட் பேரியக்கத்திற்கும் ஈடு செய்ய முடியாது ஒரு பேரிழப்பு.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்): தன் வாழ்நாளின்பெரும் பகுதியை மக்கள் சேவையிலும், பாட்டாளிகளின் மேம்பாட்டிற்காகவும் அர்ப்பணித்த சங்கரய்யா காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். ஓ.பன்னீர்செல்வம் (முன்னாள் முதல்வர்): நாட்டின் சுதந்திரத்திற்காகவும், உழைக்கும் மக்களுக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் சங்கரய்யா. எளிமையான வாழ்க்கையை முறையை கடைப்பிடித்ததோடு, கதர் ஆடை அணிவதை வழக்கமாக கொண்டிருந்தவர். இவருடைய இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது.

கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்): தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், தொழிலாளர் வர்க்கத்திற்காகவும் தமது வாழ்நாள் முழுவதும் உரிமைக் குரல் எழுப்பி பல்வேறு போராட்டங்களை நடத்தி பலமுறை சிறை புகுந்தவர். எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டு மக்களோடு மக்களாக தொண்டால் பொழுதளந்த தூய்மையான தலைவர். தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் வளர்வதற்கு தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் சங்கரய்யா.

கி.வீரமணி (திராவிடர் கழக தலைவர்): விடுதலை போராட்ட வீரரும், எளிமையும், தியாகமும், கொள்கை உறுதியும் என்றும் அவரது வாழ்க்கையின் பல தனிச் சிறப்பு அம்சங்கள் கொண்டவருமான சங்கரய்யாவின் மறைவு செய்தி கேட்டு கலங்குகிறோம். ராமதாஸ் (பாமக நிறுவனர்): இடது சாரி இயக்கங்களின் தலைவர்கள் வாழ்க்கை போராட்டங்களால் நிரம்பியிருக்கும். ஆனால், தோழர் சங்கரய்யா போராட்டத்தையே வாழ்க்கையாகக் கொண்டவர். பள்ளி பருவத்தில் தொடங்கி, நூற்றாண்டை கடந்த பிறகும் கூட மக்கள் உரிமைகளுக்காகவும், சமூக கேடுகளுக்கு எதிராகவும் போராடி வந்தவர். தமிழ்நாட்டு மக்களால் மிகவும் மதிக்கப்பட்ட தலைவர்களில் ஒருவர்.

வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்) : லட்சிய போராளியான சங்கரய்யாவின் மறைவு அனைவருக்குமான பேரிழப்பாகும். ஜனநாயகம் காக்கவும், மதச்சார்பின்மை – மதநல்லிணக்கம் பேணவும், தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் களத்தில் நிற்கும் அனைவருக்கும் நாடு முழுக்க உள்ள தோழர்களுக்கும் சங்கரய்யாவின் பிரிவு அளவு கடந்த துயரத்தை அளிக்கிறது. முத்தரசன் (சிபிஐ மாநில செயலாளர்): சிறு வயது தொடங்கி இறுதி மூச்சு சுவாசித்த காலம் வரை நெறி சார்ந்து வாழ்ந்து பொது வாழ்விற்கு முன்னுதாரணமாக திகழ்ந்த சங்கரய்யாவின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு செவ்வணக்கம் கூறி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு முழுவதும் மூன்று நாட்கள் செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்தும் வகையில் கட்சிக் கொடிகளை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறு கேட்டுக் கொள்கிறது.

ஜி.கே.வாசன் (தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்) ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் உயர அரும்பாடுப்பட்டவர். உழைக்கும் மக்களின் தோழராக இருந்து சிறப்பாக செயல்பட்ட சங்கரய்யாவின் மறைவு அரசியலில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அண்ணாமலை (தமிழக பாஜ தலைவர்): முதுபெரும் அரசியல் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான சங்கரய்யாவின் மறைவு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அன்புமணி (பாமக தலைவர்): தமிழ்நாட்டின் அரசியல் வரலாறாக இருந்தாலும், போராட்ட வரலாறாக இருந்தாலும் அதை தோழர் சங்கரய்யா அவர்களை தவிர்த்துவிட்டு எழுத முடியாது என்று கூறும் அளவுக்கு அனைத்து அரசியல் நிகழ்வுகளிலும், போராட்டங்களிலும் கலந்து கொண்டவர்.

தொல்.திருமாவளவன் (விசிக தலைவர்): தமிழக அரசின் சார்பில் டாக்டர் பட்டம் வழங்க எடுக்கப்பட்ட முயற்சி சுதந்திர போராட்டத்தின் பெருமையறியாத ஆளுநரால் தடைப்பட்டு போனது. எனவே, அரசு மரியாதையோடு நல்லடக்கம் செய்து, சங்கரய்யாவிற்கு மணிமண்டபம் ஒன்றை அரசு அமைக்க வேண்டும். டிடிவி தினகரன் (அமமுக): இந்திய சுதந்திர போராட்டம், தீண்டாமைக்கு எதிரான போராட்டம் அடித்தட்டு மக்களுக்கான போராட்டம், விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் என தன்னுடைய வாழ்க்கையின் பெரும் பகுதியினை சிறையிலேயே கழித்த அப்பழுக்கற்ற பொதுவாழ்வின் தலைவர் சங்கரய்யா அவர்களின் இழப்பு கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியா நாட்டிற்கே ஏற்பட்ட இழப்பாகும்.

மேலும், எர்ணாவூர் நாராயணன் (சமத்துவ மக்கள் கழகம் தலைவர்), ஏ.சி.சண்முகம் (புதிய நீதி கட்சி தலைவர்), முபாரக் (எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர்), என்.ஆர்.தனபாலன் (பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர்), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி தலைவர்), தேமுதிக, மக்கள் நீதி மய்யம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி சார்பாக இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. என்.சங்கரய்யா உடலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரங்கராஜன், மாநில தலைவர் பாலகிருஷ்ணன், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, பெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, தாம்பரம் மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் இ.ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.எஸ்.செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்.

The post சங்கரய்யா மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Sangkarayya ,CHENNAI ,Communist Party ,Shankaraiah ,Puduwa ,Governor ,Sankaraiah ,
× RELATED நாகை நாடாளுமன்ற தொகுதியில் 4 முறை...